Saturday, 12 December 2015

அமெரிக்கா – ஒரு அறிமுகம்
புதிய உலகம்

·         உலகத்தால் பிரமிப்புடன் பார்க்கப்படும் செல்வச் செழிப்பு மிக்க வல்லரசு அமெரிக்கா ‘கண்டுபிடிக்கப்பட்ட’தே ஒரு விநோதமான விபத்து தான்.
·         இந்தியாவுடன் வாணிபம் செய்தால் பெரும் பொருள் ஈட்டலாம் என்று உணர்ந்த ஐரோப்பிய நாடுகள், 15 ஆம் நூற்றாண்டு காலத்தில், நம்நாட்டுக்கான கடல்வழி மார்க்கத்தைக் கண்டறிய முயன்றன. கிரிஸ்டோபர் கொலம்பஸ் என்ற இத்தாலிய மாலுமி, ஸ்பெயின் மன்னரின் ஆதரவுடன், 1492 ஆம் ஆண்டு இந்தியாவை நோக்கிக் கடல்பயணம் மேற்கொண்டார். ‘உலகம் தட்டையானது’ என்று பலரும் நம்பிய அக்காலத்தில், ‘இல்லை, அது உருண்டையானது’ என்று உணர்ந்திருந்த கொலம்பஸ், கிழக்கே இருந்த இந்தியாவை அடைய, மேற்கு நோக்கிப் புறப்பட்டார். நீண்ட, கடினமான பயணத்தில் முடிவில் கரை தென்பட்டது. ‘ஆ, இந்தியாவை அடைந்தேன்’ என்று மகிழ்ந்த கொலம்பஸ், அந்த நிலப்பரப்புக்கு, ‘கிழக்கு இந்தியத் தீவுகள்’ (East Indies) என்று பெயர்சூட்டிவிட்டு, ஸ்பெயின் திரும்பினார்.
·         பின்னர், 1499-1502 இல் அதே பகுதிக்குப் பயணம் சென்ற அமெரிக்கோ வெஸ்புகி என்ற மற்றொரு இத்தாலியர், ‘கொலம்பஸ் நினைத்தது போல இது இந்தியா அல்ல; உலகம் அதுவரை அறிந்திராத முற்றிலும் ‘புதிய உலகம்’ (The New World) என்ற உண்மையை உணர்ந்து அறிவித்தார்.
·         அட்லான்டிக் மற்றும் பஸிஃபிக் பெருங்கடல்களுக்கு இடையே, வடக்கு தெற்கு என்ற இரண்டு பகுதிகளாய், பிரும்மாண்டமாய் நீண்டிருக்கும், அமெரிக்கா என பின்னால் பெயரிடப்பட்ட அந்த ‘புதிய உலக’த்தைக் கண்டுபிடித்த பெருமை யாரைச் சேர்ந்தது? ‘இந்தியா’ என்று நம்பி முதலில் அதைச் சென்றடைந்த கொலம்பஸ் ஐயா அல்லது அவர் வழியிலேயே பின்னர் சென்று, ‘இது புதியதொரு உலகம்’ என்று சரியாக உணர்ந்து அறிவித்த வெஸ்புகியையா?
·         ‘அமெரிக்காவைக் கண்டுபிடித்தவர்’ என்று உலகம் கொலம்பஸ் ஐக் கொண்டாடியது. அதே நேரத்தில், உண்மையை உணர்ந்து அறிவித்த வெஸ்புக்கி யின் பெயரான ‘அமெரிக்கா’ என்பதையே அந்த நிலப்பரப்புக்குச் சூட்டி, அவரைப் பெருமைப்படுத்தினர், பின்னர் அங்கு குடியேறிய மக்கள்.
·         இதற்கு முன்பே, அந்தக் கண்டங்களில் பல இனங்களைச் சார்ந்த பூர்வீகக் குடிமக்கள் வசித்து வந்தனர். உலகம் அமெரிக்காவை அறிந்த பின் அங்கு குடியேறிய ஐரோப்பியர்கள், இவர்களை ஒடுக்கியும், ஒதுக்கியும், அழித்தும், அந்தப் பகுதிகளை ஆக்கிரமித்தனர். ஆகவே பெரும்பாலும் ஐரோப்பா, ஆப்பிரிக்கா போன்ற பகுதிகளிலிருந்து குடியேறியவர்கள் நிறைந்த நாடாகவே திகழும் USA எனப்படும் அமெரிக்க ஐக்கிய நாடும், அதன் குடிமக்களும், இது போல, பல நாடுகள், இனங்கள் ஆகியவற்றின் கலப்பாலும், கூட்டுறவாலும் உருவானவர்களே ஆவர்.
·         தெரிந்த பெண்மணி ஒருவரது தாய் ஜெர்மானியர். தந்தை அயர்லாந்தைச் சேர்ந்தவர். இவர் மணந்துகொண்டதோ, போலந்து நாட்டைச் சேர்ந்தவரை. இந்நிலையில் இவரை யார் என்று சொல்வது? அமெரிக்கர் என்று தாராளமாக அடித்துச் சொல்லலாம்!  
·         அமெரிக்காவைக் கண்டுபிடிக்கக் காரணமாக இருந்த ஸ்பெயின் தேசத்தவர்கள் தான், முதலில் அங்கு குடியேறினார்கள். பின்னர் வந்தவர்களே ஆங்கிலேயர்கள். அமெரிக்க மொழியான ஆங்கிலத்துடன் கூட, ஸ்பெயினின் ஸ்பானிஷ் மொழியும் பலஇடங்களில் பழக்கத்தில் இருப்பதை இன்றும் காணலாம்.


ஆங்கிலத்துடன் ஸ்பானிஷ் மொழி


சுதந்திர அமெரிக்கா  

·         அமெரிக்காவில் முதலில் குடியேற்றங்களை (காலனிகள்) அமைத்த ஸ்பெயின், மற்ற ஐரோப்பிய நாடுகள் ஆகியவற்றை, பின்னர் வந்த இங்கிலாந்து வீழ்த்தி, ஆங்கிலேயர்களை அங்கு குடியமர்த்தியது. காலப்போக்கில் எழுந்த பல பிரச்னைகள் காரணமாக, அமெரிக்காவில் அமைந்த ஆங்கிலேயக் காலனிகள், தங்கள் சுதந்திரத்துக்காக, தாய்நாடான இங்கிலாந்தையே எதிர்த்து, 18 ஆம் நூற்றாண்டில் போராடத் தொடங்கின. ஆயுதப் புரட்சிகள், போர்கள், பலரது உயிர்த்தியாகம் போன்றவற்றுக்குப் பின், 1776 ஜூலை 4 ஆம்நாள் சுதந்திர அமெரிக்கா மலர்ந்தது.
·         ஆங்கில ஆட்சியை எதிர்த்துப் போராடி வென்று, சுதந்திரம் பெற்ற நாடு என்ற வகையில், இந்திய வரலாற்றை ஒத்திருக்கிறது, அமெரிக்க சரித்திரம்.
·         அமெரிக்கப் படைகளுக்குத் தலைமையேற்று வென்று, பின்னர் சுதந்திர அமெரிக்காவின் முதல் ஜனாதிபதியாகப் பதவிவகித்த ஜார்ஜ் வாஷிங்டன், அந்நாட்டின் தேசத்தந்தையாகப் போற்றப்படுகிறார். அவரது பெயரில் அமைந்த வாஷிங்டன் நகரம், அமெரிக்காவின் தலைநகரமாக விளங்குகிறது.
·         நாட்டு விடுதலை பெற்றுத் தந்தவர் வாஷிங்டன் என்றால், 1863 இல், அப்போது வழக்கத்தில் இருந்த அடிமை முறையை ஒழித்து, கருப்பினத்தவருக்கு விடுதலை பெற்றுத் தந்தவர், மற்றொரு மாமனிதரான ஆப்ரஹாம் லிங்கன்.

சுதந்திர தேவி

·         விடுதலைபெற்ற அமெரிக்காவின் பெருமைமிகு சின்னமாகத் திகழ்கிறது, சுதந்திரதேவியின் சிலை. பிரான்சில் வடிவமைக்கப்பட்டு, அமெரிக்காவுக்குப் பரிசளிக்கப்பட்ட இந்த தாமிரத்தாலான பதுமை, அட்லான்டிக் பெருங்கடலில், நியூயார்க் துறைமுகத்துக்கு அருகே உள்ள சுதந்திரத் தீவில் (Liberty Island), 1886 இல் நிறுவப்பட்டது. உயர்த்திப்பிடித்த ஒரு கையில் சுதந்திர ஜோதியும், மற்றொரு கையில், அமெரிக்க சுதந்திர தினம் பொறிக்கப்பட்ட சட்டசாசனமும் ஏந்தியபடி, சுமார் 310 அடி உயரத்தில், பேரெழிலுடன், கம்பீரமாகக் காட்சி தருகிறாள்


சுதந்திரதேவி

·         ஆனால், அங்குள்ள அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள அவள் முகத்தை மட்டும் அருகிலிருந்து பார்க்கும் போது, அதில் சோகமும், குழப்பமும் அப்பட்டமாய்த் தெரிகின்றன. ‘உலகை, வன்முறை, பயங்கரவாதம் போன்ற அபாயங்களும்; மனிதர்களை, ஆசை, பயம் போன்ற உணர்வுகளும் தளைப்படுத்தியிருக்கும் வரை, உண்மையான சுதந்திரம் என்பது ஏது?’ என்ற உண்மை, அந்த முகத்தில் பிரதிபலிப்பதாகவே தோன்றுகிறது.

  சுதந்திரதேவி முகத்தில் சோகம்

 இருப்பினும்,
‘இதந்தரு மனையின் நீங்கி இடர்மிகு சிறைபட்டாலும்,
பதந்திரு இரண்டும் மாறிப் பழிமிகுந் திழிவுற்றாலும்,
விதந்தரு கோடி இன்னல் விளைந்தெனை அழித்திட்டாலும்
சுதந்திர தேவி ! நின்னைத் தொழுதிடல் மறக்கிலேனே.
என்ற பாரதியின் வரிகளுடன் அவளைப் பணிகிறோம்.

அமெரிக்க விடுதலைப் புரட்சி
·         தாய்நாடான இங்கிலாந்துக்கும், அமெரிக்காவில் உருவான ஆங்கிலக் காலனிகளுக்கும் இடையே ஏற்பட்ட உரசல்கள், 1770 களில் தீவிரமடைந்தன. தேயிலை போன்ற தினசரி உபயோகப் பொருட்கள் மீது விதிக்கப்பட்ட வரிகளை எதிர்த்துப் போராடிய காலனி மக்கள், இங்கிலாந்திலிருந்து அமெரிக்காவுக்கு கப்பல்களில் கொண்டுவரப்பட்ட 342 தேயிலைப்பெட்டிகளை,  1773, டிஸம்பர் 16 ஆம் தேதி இரவு, பாஸ்டன் துறைமுகத்தில், கடலில் தூக்கி எறிந்து, தங்கள் ஆத்திரத்தை வெளிப்படுத்தினர். அமெரிக்க விடுதலை புரட்சியின் முக்கிய நிகழ்வான இந்த ‘பாஸ்டன் தேயிலை விருந்து’ (The Boston Tea party) நடந்த இடத்தில், ஒரு அருங்காட்சியகம் உள்ளது. ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி - ஆம், வியாபாரம் செய்வதற்காக இந்தியாவுக்கு வந்து, நம்மையே அடிமையாக்கிக்கொண்ட அதே வர்த்தக நிறுவனம் தான் – கப்பல்களில் எடுத்துவந்த தேயிலைப் பெட்டிகளை, கடலில் வீசிப் போராடியதை எல்லாம் தத்ரூபமாக, இங்கு, சித்தரித்தும், நடித்தும் காட்டுகிறார்கள். 


 பாஸ்டன் தேயிலை விருந்து அருங்காட்சியகம்


·         சித்திரம் பேசுதடி: அருங்காட்சியகத்தில் பார்வைக்கு உள்ள படங்களில் இரண்டு, திடீரென உயிர்பெற்று, நம்மிடையே பேசி, நடிக்கின்றன. ‘காலனி மக்கள், எங்கள் ஆட்சிக்குக் கட்டுப்பட்டவர்கள்’ என்கிறார் பிரிட்டிஷ் அரசர், மூன்றாம் ஜார்ஜ். ‘இல்லை, விடுதலையை நோக்கி நடைபோடும் சுதந்திர மக்கள், நாங்கள்’ என்கிறார், சாமுவேல் ஆடம்ஸ் என்ற விடுதலைப் போராட்ட வீரர். ‘விடுதலையா….. அந்த பேச்சுக்கே இடமில்லை’ என்று சீறுகிறார் மன்னர். ‘அரசே, நாங்கள் இரண்டில் ஒன்றை அடைந்தே தீருவோம்……சுதந்திரம் அல்லது மரணம்……….’ என்று முழங்குகிறார், ஆடம்ஸ். காண்பவர் உடல் சிலிர்க்கிறது.


 சித்திரம் பேசுதடி

·         இதேபோல், ‘ஓல்ட் ஸ்டேட் ஹவுஸ்’ இல் உள்ள அருங்காட்சியகம், 1770 இல் நடந்த ‘பாஸ்டன் படுகொலை’ யை சித்தரிக்கிறது. 5 பேர் (மட்டுமே) பலியான இந்த நிகழ்வை பெரிய படுகொலை (Massacre) என்றெல்லாம் பெரிது படுத்துகிறார்களோ என்று நம்போன்ற இந்தியர்களுக்கு ஒருகணம் தோன்றும். 130 கோடி என்ற நம் மக்கள்தொகையைப் போல, பெரும் எண்ணிக்கையில் எது இருந்தாலும், அதன் மதிப்பு குறைந்துவிடும் போலிருக்கிறது. அமெரிக்கா போன்ற நாடுகளில், சில மரணங்களே, பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதற்கு, அவர்களின் குறைந்த மக்கள்தொகைதான் முக்கியக் காரணமோ?
·         அமெரிக்க விடுதலைப் புரட்சியுடன் நெருங்கிய தொடர்புடைய பாஸ்டன் நகரில், இதுபோன்ற சரித்திர முக்கியத்வம் வாய்ந்த பல இடங்கள் உள்ளன. ‘விடுதலைப் பாதை’ (Freedom Trail) என்ற பெயரில், சுமார் 3 மைல் தூரத்துக்கு, பூமியில் பதிக்கப்பட்டுள்ள அடிச்சுவடுகளைப் பின்பற்றி நடந்துசென்று, இந்த இடங்களையெல்லாம் பார்த்தும், அமெரிக்க சரித்திரத்தைப் பற்றிய பல பயனுள்ள செய்திகளை அறிந்தும் கொள்ளலாம் என்பது, ஆச்சர்யமான உண்மை.


விடுதலைப் பாதை
·         இதை எல்லாம் பார்க்கும் போது, விளம்பரப்படுத்திக் காசாக்கப்பட்டாலும், சரித்திரம் என்பது, அங்கு போற்றிப் பாதுகாக்கப்படுகிறது; பெருமையுடன் பிரகடனப்படுத்தப்படுகிறது, என்பது நன்கு தெரிகிறது. ‘சில நூற்றாண்டு சரித்திரத்தையே கொண்ட அமெரிக்கா இப்படியென்றால், ஆயிரமாயிரம் ஆண்டுகளின் சரித்திரப் பின்னணி கொண்ட நாம், அந்த பெரும் பாரம்பர்யத்தை எவ்வளவு தூரம் மதித்துப் போற்றுகிறோம்?’ என்ற கேள்வியும் எழவே செய்கிறது.
·         இந்த அருங்காட்சியகங்களில், வரலாற்றைச் சித்தரிக்கும் ஆண்களும், பெண்களும், 18 ஆம் நூற்றாண்டு ஆடையலங்காரங்களுடன், நம்மை அந்தக்காலச் சூழ்நிலைகளுக்கே கூட்டிச்செல்கிறார்கள். கழுத்து முதல் கணுக்கால் வரை நீண்டிருக்கும் பாரம்பர்ய உடைகளுடன் இங்கு தோன்றும் இந்தப் பெண்களைப் பார்க்கும் போது, A thing of beauty is a joy for ever, with or without the Teacup…………… என்று தோன்றியது. உங்களுக்கு என்ன தோன்றுகிறது?


 A thing of beauty is a joy for ever
·         இந்த ஆடைகளுடன், தற்கால அமெரிக்கப் பெண்கள் அணியும் குட்டை உடைகளை ஒத்திட்டுப் பார்க்கும் போது, நாகரிகம் வளர, வளர, ஆடைகள் குறைந்து கொண்டே வந்துள்ளது தெரிகிறது. ஒருவேளை, உடைகளைக் குறைப்பதுதான் நாகரிக வளர்ச்சியின் அடையாளம் என்று எண்ணி, அவர்கள், உடைகளைக் குறைத்து, நாகரிகம் வளர்ந்துவிட்டதாக எண்ணிக்கொள்கிறார்களோ? 
·         இது போன்ற பல போராட்டங்களின் முடிவில் மூண்ட கடும் போர்களின் இறுதியில், 1781 அக்டோபர் 19 ஆம் நாள், சார்லஸ் கார்ன்வாலிஸ் இன் ஆங்கிலேயப் படைகள், ஜார்ஜ் வாஷிங்டனின் அமெரிக்கப் படைகளிடம் சரணடைந்ததுடன், சுதந்திர அமெரிக்கா உலகில் தலைநிமிர்ந்து நிற்கத் தொடங்கியது.
·         பின்னர் இந்தியாவின் கவர்னர்ஜெனரலாக நியமிக்கப்பட்ட போது, அமெரிக்காவில் ஏற்பட்ட அவமானத்தால் புழுங்கிக்கொண்டிருந்த இதே கார்ன்வாலிஸ், மாவீரன் திப்புசுல்தானுடன் ஆக்ரோஷமாகப் போராடினார் என்கிறது நம் சரித்திரம். உலகின் பல்வேறு நாடுகள் பூகோளத்தால் மட்டுமல்ல, சரித்திரத்தாலும் சம்மந்தப்பட்டுள்ளன என்பது இதிலிருந்து புறிகிறது.
·         சுதந்திர அமெரிக்க அரசியலில் தற்போது உள்ள இருகட்சி முறை, 19ஆம் நூற்றாண்டின் மத்தியில் தொடங்கியது எனலாம்.

கழுதைச் சிலையின் படம்
இங்கிருப்பது ஏதோ தமாஷுக்காக அல்ல. பாஸ்டன் நகரின் Old City Hall இல் நிறுவப்பட்டுள்ள இந்தக் கழுதை தான், தற்போது அமெரிக்காவை ஆட்சிபுரியும் கட்சியான, ஜனநாயகக் கட்சியின் தேர்தல் சின்னமாகும். கழுதைக்கு எதிரே தரையில் பதிக்கப்பட்டுள்ள காலணிகளுக்குள் உள்ள யானை, மற்றொரு கட்சியான குடியரசுக் கட்சியின் சின்னமாகும். இது போன்ற கழுதைச் சின்னமெல்லாம் நம்நாட்டுக் கட்சி எதற்காவது இருந்திருந்தால் அது என்ன பாடுபட்டிருக்கும்? நல்லவேளை, நம் அரசியலில் கழுதைகள் இல்லை என்று நிச்சயமாகச் சொல்ல முடியாவிட்டாலும், கழுதைச் சின்னங்களாவது இல்லாமல் இருப்பது ஆறுதலான விஷயம் தானே?

பயங்கரவாத சோகம்

·         நியூயார்க் நகர உலக வர்த்தக மையம் என்ற இரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப்பட்ட சோகத்தை, அமெரிக்கா மட்டுமல்ல, உலகமே மறக்க முடியாது. 2001 செப்டம்பர் 11 ஆம் நாள் நிகழ்த்தப்பட்ட அந்த கோரத்தாக்குதல்களில், சுமார் 3000 பேர் மாண்டனர்.
·         தகர்க்கப்பட்ட இரு வானுயரக் கட்டிடங்கள் நின்றிருந்த இடத்தில், நாலாப்புறத்திலிருந்தும் நீர் பெருகி உள்ளே வழிந்துகொண்டேயிருக்கும் இரண்டு பிரும்மாண்டமான சதுரவடிவக் குளங்கள், நினைவிடங்களாக, நிகழ்ந்துவிட்ட சோகத்தை நினைவூட்டிக் கொண்டிருக்கின்றன.


இரட்டை கோபுர நினைவிடம்
·         ‘சொந்தச் சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டு சிந்தை இரங்கி’ மனிதகுலம் தொடர்ந்து வடித்துக் கொண்டிருக்கும் கண்ணீரைக் குறிக்கும் அந்த நீர்ப்பெருக்கில், அன்று தங்கள் இன்னுயிரை ஈந்தவர்களின் நினைவுகள் மெல்லக் கரைந்துகொண்டிருக்கின்றன.
·         குளங்களைச் சுற்றியுள்ள சுவர்களின் மேற்பகுதிகளில், அன்று உயிரிழந்தவர்கள் அனைவரின் பெயர்களும் பொறிக்கப்பட்டுள்ளன. சில இந்தியப் பெயர்களையும் அங்கு காணமுடிகிறது.
·         டியானா என்ற பெண்ணும், அவள் வயிற்றில் சுமந்து கொண்டிருந்த சிசுவும் அன்று கொல்லப்பட்டவர்களில் அடங்குவர்.



கருவில் மாண்ட சிசு
·         கருவிலேயே கருகிப்போன இந்தச் சிசுவை நினைக்கும் போது, ‘ஜனனம், மரணம்…….. பின் அன்னையின் வயிற்றில் மீண்டும் சயனம்,    கொடும் இச்சம்சாரச் சுழலிலிருந்து சுதந்திரம், ஈசனின் கருணையால் மட்டுமே சாத்தியம்’ என்ற ஆதிசங்கரரின் ‘பஜகோவிந்த’ வரிகள் ஞாபகம் வருகின்றன.
·         இந்த சோகம் காட்டுவது எதனை? மனிதனின் கொடுமையையா? அல்லது, சம்சார சாகரத்தில் சிக்கிக் கொள்ளும் முன்னரே, அந்த உயிரைக் காப்பாற்றி தன்னிடம் அழைத்துக் கொண்ட இறைவனின் கருணையையா?   இரண்டையும் தான் என்றே தோன்றியது.
·         வீழ்த்தப்பட்ட கோபுரங்களுக்கு இடையே, தரையில் பதிக்கப்பட்டிருந்த The Sphere எனப்படும் உலக உருண்டை ஒன்று, அந்தத் தாக்குதல்களிலும் சேதங்களுடன் தப்பிப் பிழைத்து, அதே சிதைந்த நிலையில் வேறு இடத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. அதன் முன், அணையாதீபம் சுடர்விட்டுக் கொண்டிருக்கிறது. ‘தீவிரவாத அச்சுறுத்தல்கள் உலகில் உள்ளவரை, இதைச் சரிசெய்து நிறுவுவது பொருளற்றது’ என்கிறார்கள். ஆகவே, நன்கு சீர்செய்யப்பட்டு நல்ல நிலையில் உள்ள உருண்டையைக் காணும் பாக்கியம் நம் தலைமுறையினருக்கு நிச்சயம் இல்லை என்று புறிந்தது.



சிதைந்த உருண்டை

·         தகர்க்கப்பட்ட கோபுரங்களுக்கு அருகிலேயே அவற்றிலும் உயரமான புதிய கோபுரக் கட்டிடங்கள், ‘வீழ்ந்தாலும், அதனினும் உயர்வாய், மீண்டெழுவோம்’ என்று உலகுக்கு அறிவிக்கும் விதமாய், வானளாவ எழும்பி நிற்கின்றன. இவ்வாறு, அந்த செப்டம்பர் 11 நினைவிட வளாகம், சிருஷ்டி மற்றும் சீரழிவு என்ற மனிதனின் இரு முரண்பட்ட இயல்புகளையும் ஒருங்கே பிரதிபலித்துக் கொண்டிருக்கிறது.


   அதே இடத்தில் புதிய கோபுரங்கள்

பண்பாடும், குடிமை உணர்வும் Culture and Civic Sense
·         பொது இடங்களில் மக்கள் நடந்து கொள்ளும் முறை, ஆரோக்கியமான பண்பாட்டை வெளிப்படுத்துகிறது.
·         சாலைகளில் நம்மைப் பார்த்துத் தலையசைத்துப் புன்னகைத்து ‘ஹாய்’ சொல்லிச் செல்லும் அறிமுகமே இல்லாத அமெரிக்கர்கள்; கைப்பேசித் திரையில் வரைபடத்தை வரவழைத்தும் கூட, பொதுஇடங்களில் நமக்கு வழிசொல்லும் தெரியாத மனிதர்கள்; ஆலோசனைகள் வழங்கி தயங்காமல் உதவிபுரியும், ரயில்வே போன்ற பொதுசேவைத்துறைப் பணியாளர்கள்; போக்குவரத்து விதிகளை மதிப்பதுடன், சாலையைக் கடக்கவரும் பாதசாரிகளைப் பார்த்ததும், முன்னதாகவே தங்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு, ‘நீங்கள் முதலில் செல்லுங்கள்’ என புன்னகையுடன் சைகைசெய்யும் வண்டியோட்டிகள்; வாகனங்களில் ‘ஹார்ன்’களையே எழுப்பாமல், சூழ்நிலையை மாசுபடாமல் காக்கும் ஓட்டுனர்கள்;



 ஊனமுற்றவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் வாகனங்களை நிறுத்தாத பண்புள்ள வாகனஓட்டிகள் என அதிசயப்பட வைப்பவர்கள் பலர். 
·                  கருப்பினத்துக்கு எதிரான வன்முறைகள், கொலை, கொள்ளை போன்றவை ஆங்காங்கே நிகழ்ந்தாலும், சட்டத்தின் ஆட்சி பெருமளவு நடப்பதையும், ஒழுங்கு, கட்டுப்பாடு, தனிமனிதப் பண்பாடு, நாகரிக முதிர்ச்சி போன்றவை அமெரிக்க உணர்வில் ஊறியிருப்பதையும் இவை காட்டுகின்றன.
·         அங்குள்ளது, வெளிப்படையான சமுதாய அமைப்பு. கல்யாணம் முடிந்து, பாரம்பரிய திருமண உடையில் சாலையில் கால்பதித்த, புதுமணத் தம்பதியினர், சந்தோஷமாக போட்டோவுக்குப் போஸ் கொடுத்தனர். உள்ளத்தில் கனவும், கண்களில் காதலும் இருந்தால், நடுத்தெருவிலேயே சொர்கத்தையும் காணலாம் என்று தெரிந்தது. காதலின் பெருமயக்கத்தில் இருப்பவர்களுக்கு, நடுத்தெருவின் சாதாரண போக்குவரத்து நெரிசலெல்லாம் தெரிய நியாயமில்லை என்பதும் புறிந்தது.


                     காதலுக்குக் கண்ணில்லை, கண்ணிருந்தால் அங்கு காதலே இல்லை, போலும்! 
                
      நகர்ப்புறக் காட்சிகள்
·         Skyscrapers எனப்படும் வானளாவிய கட்டிடங்களுக்குப் புகழ்பெற்றது, நியூயார்க் நகரின் மான்ஹட்டன் பகுதி. 1250 அடி உயரமும், 102 மாடிகளும் கொண்ட, அழகிய, புகழ்பெற்ற Empire State Building இவற்றில் ஒன்று. இதன் உயரங்களிலிருந்து, நகரம் மற்றும் சுற்றுப்புறங்களின் அழகிய காட்சியைக் காணமுடிகிறது. 1970 வரை உலகின் மிக உயரமான கட்டிடமாக இருந்த இங்கு, சற்றே முன்னதாக, அதாவது சுமார் 45 வருடம் முன்பு வந்திருந்தால், உலகத்தின் கூரையில் ஏறி நின்றதாகப் பெருமை அடித்துக் கொண்டிருக்கலாம். கொடுத்துவைக்கவில்லை.



 Empire State Building இலிருந்து நியூயார்க் நகரம்
·         அந்த பெரும் உயரத்தில், உலகத்தின் பலபகுதிகளிலிருந்தும் வந்திருந்த பார்வையாளர்களின் நெருக்கியடிக்கும் கூட்டம், பலமொழிகளில் சந்தோஷக் கூச்சல்கள் இவற்றுக்கு இடையேயும், நிம்மதியான உறக்கத்தில் ஆழ்ந்திருந்தது அந்தக் குழந்தை. சூழ்நிலை எதுவானாலும், பூரண அமைதியுடன் இருப்பதென்பது, ஞானிகளாலும், குழந்தைகளாலும் மட்டுமே இயலும் என்று புறிந்தது.



Empire State Building உயரத்தில் குழந்தை
·         பெரும் சந்தடியும், பரபரப்பும் மிக்க நியூயார்க் நகர மான்ஹட்டன் பகுதியில் நம்மஊரிலேயே காணாமல் போய்க்கொண்டிருக்கும் குருவிக்கூட்டங்களைக் காணமுடிகிறது. நம்ஊரில் இவை இல்லாமல் போனதற்குச் சொல்லப்படும் காரணங்களையெல்லாம் ஒதுக்கிவிட்டு, மனிதர்களைப் போல இவையும், பிழைப்பைத்தேடி, இங்கிருந்து அங்கு புலம்பெயர்ந்து போனதுதான் உண்மையான காரணமோ என்று நினைக்கத்தோன்றுகிறது.



நியூயார்க் குருவிகள்

·         உலகப்புகழ்பெற்ற நூல்நிலையங்கள் பல, பிரும்மாண்டமான பாரம்பரியக் கட்டிடங்களில் செயல்பட்டு வருகின்றன.



                                       நூல்நிலையம் - வெளியே

                                        நூல்நிலையம் - உள்ளே

உட்புறங்கள் கண்ணைக்கவரும் ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்டு, அழகிய கலைக்கூடங்களைப் போலத் திகழும் இவற்றைச் சென்று பார்ப்பதே, அலாதியான அனுபவம். அற்புதமான அருங்காட்சியகங்கள் பலவும் பல நகரங்களில் அமைந்துள்ளன. கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டைனாஸர் ஓடு



   ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன் பூமியில் விழுந்த விண்கல்லின் பகுதி                                                             



   போன்ற பல அபூர்வப் பொருட்களைக் கொண்டுள்ள இவைகளை, மணிக்கணக்கில் அல்ல, நாட்கணக்கில்தான் பார்க்கவேண்டும். 
 
·         வாழ்க்கையை அனுபவிக்கத் தெரிந்தவர்கள் அமெரிக்கர்கள். கூரையிலும், பின்பகுதியிலும் படகுகளையும், சைக்கிள்களையும் சுமந்து கொண்டும், ஜன்னல்வழியாக தலைநீட்டிக் கொண்டிருக்கும் செல்லநாய்களை ஏற்றிக் கொண்டும், வாரஇறுதி விடுமுறைநாட்களில் உல்லாசப்பயணத்துக்கு விரையும் கார்களை காண்பது சாதாரண விஷயம்.
காருடன் படகு
·         
  நியூயார்க் போன்ற நகரங்களின் முக்கிய சாலைகளில் கூட, பிற வாகனங்களுடன், சைக்கிள்ரிக்‌ஷா போன்றவை இயங்குவதும், நகரின் சிலபகுதிகளில் குதிரைவண்டிகள் ஓடுவதும் அதிசயக்காட்சிகள் தான்.


குதிரைவண்டி, சைக்கிள் ரிக்‌ஷா
·         இந்தியர்களால் நடத்தப்படும் கடை ஒன்றில், ராமரும், ஆஞ்சனேயரும் இருக்கும் அழகிய படம் காணப்பட்டது. இந்தியாவிலிருந்து வந்திருக்கும் என்று நினைத்துக் கேட்டபோது, கடைக்காரர் சொன்ன பதில்- ‘இல்லை, இது சைனா தயாரிப்பு’. பொருட்களை நம்நாட்டிலேயே தயாரிக்கவேண்டும் என்றெல்லாம் பேசும்போது, இந்தியக்கலாசாரமே சைனாவில் தயாராகிக்கொண்டிருக்கிறது. ‘ஆஹா, நம் கடவுளின் புகழ் எங்கும் பரவிவிட்டதே என்று சந்தோஷப்படுவதா, அல்லது நம் சமயப் பாரம்பர்யம் எல்லாம், இவற்றைப்பற்றி எதுவுமே தெரியாதவர்களால் வியாபாரமாக்கிக் காசாக்கப்படுகிறதே என்று வருத்தப்படுவதா?’ தெரியவில்லை.

சைனா ராமர்

·         நம் ஊர்களைப் போலவே, நெரிசல்மிக்க அமெரிக்க நகரங்களிலும், மக்கள், பொது இடங்களில் வித்தைகளெல்லாம் காட்டி, பிழைக்க வழிதேடுகின்றனர். இதுபோல பணம் சம்பாதிக்கவும் வழியில்லாதவர்கள், நடைபாதைகளில் அமர்ந்து பிச்சையெடுக்கும் அவலமும், பல இடங்களிலும் தென்படுகிறது. வல்லரசுப்பட்டம் பெற்றுள்ள அமெரிக்காவின் நிலையே இதுவென்றால், ‘ஏழையென்றும், அடிமையென்றும் எவனுமில்லை ஜாதியில்…….’ என்றெல்லாம் மனிதஜாதி மார்தட்டிக் கொள்ளும் காலம், பல நூற்றாண்டுகளுக்கு இல்லை என்றே தோன்றுகிறது.



தெருவில் வித்தையும், பிச்சையும்
        
கிராமத்துப் பசுமை

·         நகரங்களை விட்டு வெளிப்பட்டுவிட்டால், எங்கும் தெரிவது, பச்சை, பச்சை, பச்சைப்பசேல் தான். இங்கெல்லாம் வகைவகையான மான்கள் சுதந்திரமாய்ச் சுற்றித் திரிகின்றன. வாகனங்கள் பறக்கும் நெடுஞ்சாலைகளில், ‘மான்கள் குறுக்கிடும் பகுதி’ என்று வண்டியோட்டிகளை எச்சரிக்கும், மான்படம் போட்ட அறிவிப்புப் பலகைகள் பல வைக்கப்பட்டுள்ளன. ‘உண்மையில், யார் பாதையில் குறுக்கிடுவது யார்?’ என்று, அங்கு போய்ச்சேர்ந்த முதல்நாளில் எழுந்த கேள்விக்கு, இன்றுவரை விடைகிடைக்கவே இல்லை.

மான்
·         சூரியவெளிச்சமே புகாத, அடர்ந்துசெழித்த மரம் செடிகொடிகள் கொண்ட, வாத்து அணில் கூட்டமெல்லாம் திரிந்துகொண்டிருக்கும் பல பெரிய பூங்காக்கள் ஏராளமாக உள்ளன. பூக்களே இல்லாத செடிகொடிகளிலிருந்துகூட வீசும் இனிய மணத்தை அனுபவித்துக்கொண்டே ‘வாக்கிங்’ போவது சுகமான அனுபவம். ‘இல்லை, இங்கு வாக்கிங் போகும் பெண்கள் பூசிக்கொண்டிருக்கும் சென்ட் போன்றவற்றிலிருந்து வீசும் வாசனை தான் இது’ என்று சொல்பவர்களும் உண்டு. ‘இது போன்ற பூங்காக்களில் வீசும் மணம் இயற்கையானதா, அல்லது பெண்களின் உடலிலிருந்து வீசுவதா?’ என்ற சந்தேகமெல்லாம் எந்த அமெரிக்க அதிபருக்கும் இதுவரை வந்ததாகத் தெரியவில்லை. இனிமேல் எழுந்தால், அதைத் தீர்த்துவைக்க ஆங்கிலக் கவிதையெல்லாம் எழுதிக்கொண்டு அவர்கள் கடவுள் நேரில் வருவாரா? என்பதையெல்லாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!


பூங்காக்கள்

நயாகரா
·         நயகரா நீர்வீழ்ச்சி உலகப்புகழ்பெற்றது. நயாகரா ஆற்றின் குறுக்கே, அமெரிக்கா, கானடா என்ற இரு நாடுகளிலும் பரந்துள்ளது, இந்த பிரும்மாண்டமான நீர்வீழ்ச்சி.
நயகரா நீர்வீழ்ச்சி
·         வீழ்ச்சியிலும், இனிமையையும், கம்பீரத்தையும் வெளிப்படுத்துவது இயற்கையால் மட்டுமே இயலும், என்று காட்டுகிறது இந்த அற்புதம்.
·         பெரும்புகையாய்க் கிளம்பும் நீர்த்துளிகளில் சூரியஒளி பட்டு, நிலத்திலும், நீரிலும் வானவில்லாய் வளையும் அற்புதக் காட்சி, எட்டாத வானத்தை, கைக்கெட்டும் மண்ணிலேயே அழைத்துவருகிறது.

மண்ணில் வானவில்
·        
    நதியின் இருபுறமும் உள்ள, அமெரிக்காவையும், கானடாவையும், இணைக்கும் வளைவுப் பாலத்தை, நடந்தோ, வாகனத்திலோ கடந்து, அடுத்த நாட்டை அடையலாம்.


பக்கத்துத் தெருவுக்குப் போகும் வழியைக் காட்டுவது போல, பக்கத்து நாட்டுக்குச் செல்லும் நடைபாதையை, மிகச் சாதாரணமாகக் காட்டும் அறிவிப்புப்பலகைக் காண ஆச்சரியமாக இருந்தது.


‘நமக்கும், அ(ச)ண்டை நாடான பாகிஸ்தானுக்கும் இடையே உள்ள பாதாளத்தை இணைக்கும் இதுபோனற பாலம் என்றாவது உருவாகுமா?’ என்ற பெருமூச்சும் எழுந்தது.  

   நாயில்லாமல் நானில்லை
·         செல்லமாக வளர்க்கப்படும் நாய்கள், அமெரிக்க வாழ்க்கையின், குறிப்பாக புறநகர் மற்றும் கிராமப் பகுதிகளின் பிரிக்கமுடியாத அங்கம் எனலாம்.
·         உடல் முழுவதும் ஷேவ் செய்து வழித்துவிட்டது போல் இருப்பவை முதல், ‘வாயிலிருந்து குலைக்கிறதா வாலிலிருந்து குலைக்கிறதா’ என்றே புறியாத அளவுக்கு ரோமக்காடாக உள்ளவை வரை, பலவகை நாய்களை, பொது இடங்களிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், விளம்பரங்களிலும் ஏராளமாகக் காணலாம்.

பொது இடங்களில் நாய்கள்    
·         அங்கு நாய்களுக்குள்ள செல்வாக்கு அசாதாரணமானது. வழக்கமாக ‘வாக்கிங்’ வரும் பெரியவர் ஒருவர், என்னிடம் ‘ஹாய்’ என்றார். அவருடன் வந்த நாய் ‘வள்’ என்றது. ‘ஆயிரம் உண்டிங்கு நாய் ஜாதி, எனில் அன்னியர் வந்து புகல் என்ன நீதி?’ என்று நினைத்திருக்கலாம். தவறில்லை. போட்டோ எடுப்பதற்கான என் வேண்டுகோளை ஏற்ற பெரியவர், நாயிடம் நல்லவார்த்தை எல்லாம்- ஆங்கிலத்தில்தான்- சொல்லி சமாதானப்படுத்தினார். பின்னர் இருவரும் போஸ் கொடுத்தனர். புகைப்படத்தைப் பார்த்தாலே தெரிகிறது, நாய்க்கு அதில் எவ்வளவு விருப்பம் இருந்தது என்று. இருந்தாலும் நாயைக் குறைசொல்ல மனம் வரவில்லை. தினமும், அந்த வயதானவரை ஜாக்கிரதையாக வாக்கிங் கூட்டிவந்து, மீண்டும் பத்திரமாக வீட்டுக்குத் திரும்ப அழைத்துகொண்டுபோய் விடுகிறது இல்லையா?

பெரியவருடன் நாய்
·        
  நடைபாதையில் முன்னால் போய்க்கொண்டிருந்த ‘கரடி’ ஒன்றை அருகில் போய்ப் பார்த்ததும்தான் தெரிந்தது, அது வழக்கம்போல நாய்தான் என்று. ‘நிழலுக்குள் வந்துவிடு. இவர் உன்னைப் படம் எடுக்கப்போகிறார்’ என்று உடனிருந்த வெள்ளைவெளேர் பெண்மணி அதனிடம் சொல்லிவிட்டு, புன்னகையுடன் தலையசைத்து போட்டோபிடிக்க அனுமதி கொடுத்தார். நாய் அழகாக நிழலில் உட்கார்ந்து போஸ் கொடுத்தது. நம் குளிர்காலங்களில் அடிக்கும் வெய்யிலைப் போன்ற அந்த வெப்பத்திலேயே நிழலில் ஒதுங்கும் அவர்களை, அடுத்த மே மாதம் நம் ஊருக்கு, அவர்கள் செலவிலேயே, அழைத்துவர வேண்டும். வெள்ளையழகி மாரியா ஷரபோவாவாகவும் அவள் செல்லநாயாகவும் வருபவர்கள், கருப்பழகி சரீனா வில்லியம்ஸ் ஆகவும் கரடியாகவும் திரும்பிப் போய்ச்சேருவார்கள்! அவளிடம் நன்றி சொல்லி விடைபெற்ற உடனே முளைத்தது அந்த சந்தேகம். ‘யாரிடம் எப்படிச் சொன்னால் நன்குபுறியும் என்று மிகச்சரியாக முடிவுசெய்து, நாயிடம் ஆங்கிலத்திலும், என்னிடம் சைகைமொழியிலும் அந்தப்பெண் பேசியது எப்படி?’ என்பதுதான் அது!

‘கரடி’ நாய்
·         
  மடியில் நாயுடன் தெருவோரத்தில் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்த பெண்மணி - இது போல, அது சாலையா, நடைபாதையா, உணவகமா என்றே நிச்சயமாகச் சொல்லமுடியாத இடமெல்லாம் அங்கு சாதாரணம் - காமராவில் சிக்கினாள். போட்டோ எடுக்கும்போதே அந்த பெரிய சந்தேகம் எழுந்துவிட்டது. முன்னால் மேஜையிலிருந்த காலிக் கோப்பைகளில், அந்தப்பெண் அருந்தியது எதை, நாய் குடித்தது எதை? படத்தைப் பார்த்து, சரியாக முடிவு செய்பவர்கள், தாராளமாக சந்தோஷப்பட்டுக்கொள்ளலாம். 

பெண்மடியில் நாய்)
·         
 நகருக்கு வெளியேயும், கிராமப்புறங்களிலும், பெரிய தோட்டங்களின் நடுவே அமைந்துள்ளன வீடுகள் மிகப்பெரும்பாலானவற்றில் நாய்கள் இருக்கின்றன. தோட்டங்களைச் சுற்றிலும், பூமிக்குக் கீழே புதைக்கப்பட்டுள்ள மின்கம்பிகளிலிருந்து வெளிப்படும் அதிர்வலைகள், கண்ணுக்குத் தெரியாத வேலிபோல இருந்து, நாய்கள் சாலைகளில் வந்துவிடுவதைத் தடைசெய்கின்றன. ‘Dog contained by invisible fence’ என்ற அறிவிப்புப் பலகைகளும் வைக்கப்பட்டுள்ளன. இருந்தும், வேலிக்கு அருகே சென்று நாயைப் படமெடுக்க சற்று பயமாகத்தான் இருந்தது. ‘நாய்க்கு வேலி, நமக்கு பயம்’, என கண்ணுக்குத் தெரியாத தடைகள், மிருகங்களுக்கு மட்டுமல்ல, மனிதர்களுக்கும் இருக்கத்தான் செய்கின்றன. 




மறைவான வேலிக்குள் நாய்

·         இந்த நாய் புராணங்களுக்கு அப்பால், ஆச்சர்யமான புள்ளிவிவரம் ஒன்று உள்ளது. 7 கோடி வளர்ப்புநாய்கள் உள்ள அந்நாட்டில், சுமார் 7½ கோடி என்ற அளவில் வளர்க்கப்படுபவை, பொதுஇடங்களில் காணவேமுடியாத, செல்லப் பூனைகள்! Silent Winner அதாவது ‘சத்தமில்லாமல் சாதிப்பது’ என்பது இதுதானோ?
***